உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா: வாகை சூடப்போவது யார்..?

உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி எது என்று கேட்டால் இந்திய அணியை நோக்கியே பெரும்பாலானோரின் கைகள் நீளும்.

Update: 2023-10-04 22:30 GMT


13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நீயா-நானா? சவாலுக்கு 10 அணிகள் வரிந்து கட்டுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தாவும். பருவமழை காலத்திற்கு மத்தியில் போட்டி நடப்பதால் அதற்கு ஏற்பவும் அணிகள் தங்களை தயார்படுத்துகின்றன. இதில் யார் சாம்பியன் ஆகப்போகிறார்கள் என்பது குறித்து கடந்த சில மாதங்களாக ஆரூடங்கள் உலா வந்து கொண்டு இருக்கின்றன. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதன்மையான இடத்தை ஆக்கிரமித்துள்ளன. அது பற்றிய ஒரு விரிவான அலசல் வருமாறு:-



இந்தியா (ஐ.சி.சி. தரவரிசை-1)

இந்த உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி எது என்று கேட்டால் இந்திய அணியை நோக்கியே பெரும்பாலானோரின் கைகள் நீளும். நன்கு பழக்கப்பட்ட சொந்த மண்ணில் போட்டி நடப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அனுகூலமாகும். 2011, 2015, 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் போட்டியை நடத்திய நாடு தான் கோப்பையை வென்றுள்ளது. கடந்த இரு உலகக் கோப்பை போட்டியில் தரவரிசையில் 'நம்பர் ஒன்' அந்தஸ்துடன் நுழைந்த அணியின் கைகளில் தான் கோப்பை தவழ்ந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால் இந்த பட்டியலில் அடுத்து இந்தியா தான் இணைய வேண்டும். சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை (66 ஆட்டத்தில் 40-ல் வெற்றி) குவித்த அணி, அதிக முறை 300-க்கு மேல் (21 முறை) திரட்டிய அணி எல்லாமே இந்தியா தான். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தங்களை மேலும் பட்டை தீட்டியுள்ளது. சரியான நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு விட்டனர். இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் சூப்பர் பார்மில் உள்ளார். இந்த சீசனில் 20 ஆட்டங்களில் 5 சதம், 5 அரைசதம் உள்பட 1,230 ரன்கள் குவித்துள்ளார். 2023-ம் ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் இவர் தான். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கில், உலக கோப்பையிலும் ரன் மழை பொழிந்தால் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்து விடுவார். அனுபவசாலியான விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் பங்களிப்பு இந்த முறை நமது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும். பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுகிறார்கள். குல்தீப் இந்த ஆண்டில் 33 விக்கெட்டுகளை கபளீகரம் செய்துள்ளார். முகமது சிராஜ் ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 21 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இது எல்லாம் இந்தியாவுக்கு அசுர பலமாக தெரிந்தாலும், அதிகமான வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதும், கடைசி கட்டத்தில் பேட்டிங் திறன் இல்லாததும் சற்று கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. லீக் சுற்றில் 9 நகரங்களில் ஆடும் இந்திய அணியினர் 34 நாளில் ஏறக்குறைய 8,400 கிலோமீட்டர் பயணிக்க வேண்டி உள்ளது. ஆனால் ரசிகர்களின் உற்சாக குரலை கேட்கும்போது சோர்வு எல்லாம் புத்துணர்ச்சியாகி விடும்.

இந்தியாவை பொறுத்தவரை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது, அதீத எதிர்பார்ப்பு அழுத்தத்துக்கு வழிவகுக்கும். நெருக்கடியை சாதுர்யமாக கையாண்டாலே போதும். நவம்பர் 19-ந்தேதி ஆமதாபாத்தில் இந்திய வீரர்கள் 3-வது முறையாக உலகக் கோப்பையை தூக்கிப்பிடிப்பதை கண் குளிர தரிசிக்கலாம்.

உலகக் கோப்பை நிலை: 1975-முதல் சுற்று, 1979-முதல் சுற்று, 1983-சாம்பியன், 1987-அரைஇறுதி, 1992-முதல் சுற்று, 1996-அரைஇறுதி, 1999-சூப்பர் சிக்ஸ் சுற்று, 2003- 2வது இடம், 2007-முதல் சுற்று, 2011-சாம்பியன், 2015-அரைஇறுதி, 2019-அரைஇறுதி



இங்கிலாந்து (ஐ.சி.சி. தரவரிசை-5)

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு எட்டாக்கனியாக கண்ணாமூச்சு காட்டிய உலகக் கோப்பை 4 ஆண்டுக்கு முன்பு முதல்முறையாக கனிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டி சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரி அடித்ததன் அடிப்படையில் உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் மகுடம் சூடி பிரமிக்க வைத்தது. இங்கிலாந்தின் பேட்டிங்கும் சரி, பந்து வீச்சும் சரி வலிமை மிக்கதாக காணப்படுகிறது. கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. இதில் ஒரு நாள் போட்டி கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்துவிடுபட்டு மறுபிரவேசம் செய்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இங்கிலாந்தின் பேட்டிங் எந்திரமாக ஜோ ரூட் வர்ணிக்கப்படுகிறார். கடந்த உலகக் கோப்பைக்கு பிறகு அவர் 19 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. என்றாலும் அவரை எள்ளளவும் குறைத்து மதிப்பிட முடியாது. அவருடன் டேவிட் மலான், பேர்ஸ்டோ, கேப்டன் ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டன், ஸ்டோக்ஸ், ஹாரி புரூக் உள்ளிட்டோர் அதிரடி ஜாலத்துக்கு கைகோர்த்துள்ளனர்.

மார்க் வுட், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் உள்பட 6 வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிக்கிறார்கள். காயத்தில் இருந்து குணமடையாத ஜோப்ரா ஆர்ச்சர் மாற்று வீரராக அழைக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு ஐ.பி.எல்.-ல் விளையாடிய அனுபவம் உள்ளதால் இங்குள்ள சூழலை தெளிவாக அறிவார்கள். அதனால் இந்தியாவுக்கு அடுத்து உலகக் கோப்பையை வெல்வதற்கு இங்கிலாந்துக்கே அதிக வாய்ப்பு என்று அடித்து சொல்லலாம். 9 லீக் ஆட்டங்களுக்காக 8 நகருக்கு செல்ல வேண்டி இருப்பது அவர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம்.

உலகக் கோப்பை நிலை: 1975-அரைஇறுதி, 1979- 2வது இடம், 1983-அரைஇறுதி, 1987-2-வது இடம், 1992- 2வது இடம், 1996-கால்இறுதி, 1999-முதல் சுற்று, 2003-முதல் சுற்று, 2007- சூப்பர்8 சுற்று, 2011-கால்இறுதி, 2015-முதல் சுற்று, 2019-சாம்பியன்.



ஆஸ்திரேலியா (ஐ.சி.சி. தரவரிசை-3)

உலகக் கோப்பை வரலாற்றில் 5 முறை பட்டத்தை ருசித்த ஒரே அணி ஆஸ்திரேலியா. இந்த முறையும் அதற்கான ரேசில் ஓடிக்கொண்டு இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட் என்று வலுவான பேட்டிங் பட்டாளத்தை கொண்டுள்ளது. அண்மையில் தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை பறிகொடுத்தாலும், ராஜ்கோட்டில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் கிடைத்த வெற்றி அவர்களுக்கு நம்பிக்கையுடன் பயணத்தை தொடங்குவதற்கு உத்வேகம் அளிக்கும். அவர்களின் தொடக்க வரிசையை பார்க்க நிலையானதாக தெரிகிறது. பின்வரிசை பேட்டிங் மற்றும் கடைசிகட்ட பந்து வீச்சு தான் கொஞ்சம் பலவீனமாக தென்படுகிறது. ஒரே பிரதான சுழற்பந்து வீச்சாளராக ஆடம் ஜம்பா மட்டுமே உள்ளார். பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவரைத் தான் 2-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு அணி நிர்வாகம் மலை போல் நம்பி இருக்கிறது. அவர் சொதப்பினால் மற்ற பவுலர்களுக்கு கூடுதல் சுமையாகி விடும். 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 22 விக்கெட், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 27 விக்கெட்டுகளை சாய்த்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கக்கூடியவர். அவர் தொடக்கத்தில் உள்ள சூழலை சாதகமாக மாற்றி விக்கெட் வீழ்த்தும் ஆற்றல் படைத்தவர். பயிற்சி ஆட்டத்தில் கூட 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் ஆரம்பத்திலேயே ஒரு சில விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அது ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த அடித்தளமாக இருக்கும். பொதுவாக ஆஸ்திரேலிய அணியினர் உலகக் கோப்பை போன்ற கவுரவமிக்க போட்டிகளில் நெருக்கடியான சூழலை திறமையாக கையாள்வதில் கில்லாடிகள். கடைசி பந்து வரை நம்பிக்கையை இழக்காமல் போராடக்கூடியவர்கள். இந்த போர் குணத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் வீறுநடையை தடுப்பது சிரமம் தான்.

உலகக் கோப்பை நிலை: 1975-2வது இடம், 1979- முதல் சுற்று, 1983- முதல் சுற்று, 1987-சாம்பியன், 1992- முதல் சுற்று, 1996-2வது இடம், 1999-சாம்பியன், 2003- சாம்பியன், 2007-சாம்பியன், 2011- கால்இறுதி, 2015- சாம்பியன், 2019-அரைஇறுதி



நியூசிலாந்து (ஐ.சி.சி. தரவரிசை-6)

கடந்த இரு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அணி நியூசிலாந்து. இரண்டு முறையும் கோப்பையை கோட்டை விட்டது. இந்த தடவையும் நியூசிலாந்து அதே போன்று ஏற்றம் கண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பார்க்க சாதுபோல் தோன்றுவார்கள். ஆனால் களத்திற்கு வந்து விட்டால் எதையும் அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்கள். கேப்டன் கேன் வில்லியம்சன் ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் கால்முட்டியில் காயமடைந்து ஆபரேஷன் செய்த பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. தனது உடல்தகுதியை சோதித்து பார்க்க பயிற்சி ஆட்டத்தில் இறங்கி அதில் திருப்திகரமாக பேட்டிங் செய்தார். ஆனாலும் இன்னும் முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்க ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சீக்கிரம் களம் திரும்புவதை பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். ஏனெனில் வில்லியம்சன், இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை அருமையாக கணித்து ஆடக்கூடியவர். இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய டிவான் கான்வே (16 ஆட்டத்தில் 672 ரன்), வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் நியூசிலாந்தின் துருப்பு சீட்டாக இருப்பார்கள். டாம் லாதம், வில் யங், ரச்சின் ரவீந்திரா, ஜேம்ஸ் நீஷம், டிம் சவுதி, சோதி, மிட்செல் சான்ட்னெர் என்று தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 346 ரன்கள் இலக்கை சுலபமாக விரட்டிப்பிடித்தது நியூசிலாந்தின் நம்பிக்கைக்கு புத்துயிர் அளித்துள்ளது. அந்த அணியில் 15 வீரர்களில் 12 பேர் வயதில் 30-ஐ கடந்தவர்கள். அவர்கள் அடுத்த உலகக் கோப்பையில் ஆடுவார்களா என்று கேட்டால் நிச்சயமில்லை. அதனால் கனவை நனவாக்க தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள். கடந்த இரு உலகக் கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த அவர்களுக்கு 3-வது முயற்சியில் அதிர்ஷ்டம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உலகக் கோப்பை நிலை: 1975-அரைஇறுதி, 1979- அரைஇறுதி, 1983- முதல் சுற்று, 1987- முதல்சுற்று, 1992-அரைஇறுதி, 1996- கால்இறுதி, 1999-அரைஇறுதி, 2003- சூப்பர்சிக்ஸ் சுற்று, 2007-அரைஇறுதி, 2011- அரைஇறுதி, 2015-2வது இடம், 2019-2வது இடம்



பாகிஸ்தான் (ஐ.சி.சி. தரவரிசை-2)

கடைசியாக விளையாடிய 5 உலகக் கோப்பை போட்டிகளில் 3-ல் முதல் சுற்றுடன் பாகிஸ்தான் நடையை கட்டியிருக்கிறது. எப்போதும் எளிதில் கணிக்க முடியாத ஒரு அணியாக பாகிஸ்தானை சொல்வது உண்டு. ரொம்ப சாதாரணமாக ஆடிக்கொண்டு இருப்பார்கள். திடீரென யாரும் எதிர்பாராத வண்ணம் எழுச்சியின் உச்சத்தில் இருப்பார்கள். நியூசிலாந்து (4-1), ஆப்கானிஸ்தானுக்கு (3-0) எதிரான ஒரு நாள் தொடர்களை அடுத்தடுத்து வென்ற பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பை கிரிக்கெட் தோல்வி சறுக்கல் தான். அதில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர்4 சுற்றில் 228 ரன்கள் வித்தியாசத்தில் அடங்கிப் போனது விமர்சனத்திற்கு உள்ளானது. இருப்பினும் ஆசிய கண்டத்தில் போட்டி நடப்பது பாகிஸ்தானுக்கு சாதகமாகத் தான் இருக்கும். உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், புதிய நட்சத்திரம் சாத் ஷகீல், இமாம் உல்-ஹக், இப்திகர் அகமது பேட்டிங்கில் முத்திரை பதிக்கக்கூடியவர்கள். நசீம் ஷா காயத்தால் ஒதுங்கிய நிலையில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி தான் பந்துவீச்சில் அவர்களின் தலைவராக இருக்கிறார். 'ஸ்விங்' செய்வதில் வல்லவரான அவருக்கு தொடக்கத்தில் எதிரணியை சீர்குலைப்பது கைவந்த கலை. கடந்த உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் சுழற்பந்து வீச்சு பாகிஸ்தானிடம் மெச்சும்படி இல்லை. ஷதப் கான், முகமது நவாஸ் அண்மை கால போட்டிகளில் பார்மின்றி தடுமாறினர். மிடில் வரிசை பேட்டிங் மற்றும் சுழல் தாக்குதல் பிரச்சினையை சரி செய்தால் 1992-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை கோப்பையை ஏந்துவதற்கான வாய்ப்பு உருவாகும்.

உலகக் கோப்பை நிலை: 1975-முதல் சுற்று, 1979- அரைஇறுதி, 1983-அரைஇறுதி, 1987- அரைஇறுதி, 1992- சாம்பியன், 1996-கால்இறுதி, 1999-2வது இடம், 2003- முதல் சுற்று, 2007-முதல்சுற்று, 2011-அரைஇறுதி, 2015-கால்இறுதி, 2019-முதல்சுற்று




தென்ஆப்பிரிக்கா (ஐ.சி.சி. தரவரிசை-4)

1992-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக அடியெடுத்து வைத்த தென்ஆப்பிரிக்கா அணி ஒரு முறை கூட இறுதிச்சுற்றை எட்டியதில்லை. பலமான அணியாக வருவதும், அதன் பிறகு வருணபகவானாலும், இறுக்கமான சூழலை சமாளிக்க முடியாமல் கோட்டை விடுவதும் அவர்களுக்கு தொடர்கதையாகி விட்டது. முந்தைய உலகக் கோப்பை போட்டிகளுடன் ஒப்பிடும் போது இந்த முறை அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு குறைவாக உள்ளது. இருப்பினும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை சரிவில் இருந்து மீண்டு 3-2 கணக்கில் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது. அதில் ஒரு ஆட்டத்தில் ஹென்ரிச் கிளாசெனின் (174 ரன்) 'சரவெடி' பேட்டிங்கால் அந்த அணி 416 ரன்கள் குவித்து வியப்பூட்டியது. இந்த உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் குயின்டான் டி காக் மற்றும் மார்க்ரம், கேப்டன் பவுமா, கிளாசென், மில்லர், பந்து வீச்சில் ரபடா, இங்கிடி, யான்சென், ஷம்சி, கேஷவ் மகராஜ் என்று திறமையான வீரர்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் களத்தில் ஒருசேர செயலில் காட்டுவதில் தான் அவர்களுக்கு சவால் காத்திருக்கிறது.

உலகக் கோப்பை நிலை: 1992-அரைஇறுதி, 1996- கால்இறுதி, 1999-அரைஇறுதி, 2003- முதல் சுற்று, 2007- அரைஇறுதி, 2011-கால்இறுதி, 2015-அரைஇறுதி, 2019-முதல்சுற்று



இலங்கை (ஐ.சி.சி. தரவரிசை-7)

1996-ம் ஆண்டு உலக சாம்பியனான இலங்கை அணி 2003-ம் ஆண்டில் அரைஇறுதிக்கு வந்தது. 2007, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்குரிய அணியாக தங்களை நிலைநிறுத்தியது. அதன் பிறகு தொடர்ந்து சறுக்கல் தான். 2015-ம் ஆண்டில் கால்இறுதியுடன் மூட்டையை கட்டிய இலங்கை, கடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றை தாண்டவில்லை. இந்த முறை தரவரிசையில் பின்தங்கியதால் தகுதி சுற்றில் விளையாடி அதன்மூலம் பிரதான சுற்றுக்கு வர வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களில் அவர்களின் ஆட்டத்திறனை பார்த்தால், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 50 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வியை சந்திக்கும் முன்பு வரை ஓரளவு நன்றாகவே ஆடியிருந்தது. கடைசி 15 ஒரு நாள் போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்றிருந்தது. பந்துவீச்சில் அந்த அணியின் ஆணிவேராக இருந்த சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா காயத்தால் விலகியது இலங்கைக்கு பெரும் பின்னடைவாகும். இதே போல் கேப்டன் ஷனகாவின் மோசமான பேட்டிங்கும் அந்த அணிக்கு தலைவலியாக இருக்கிறது. நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, சமரவிக்ரமா நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் தீக்ஷனா, பதிரானா, வெல்லாலகே நம்பிக்கை தருகிறார்கள். பேட்டிங்கில் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன்வேட்டை நடத்தினால் மட்டுமே அரைஇறுதியில் வரும் ஒரு அணியாக நினைத்து பார்க்க முடியும்.

உலகக் கோப்பை நிலை: 1975-முதல் சுற்று, 1979-முதல் சுற்று, 1983- முதல் சுற்று, 1987- முதல் சுற்று, 1992-முதல் சுற்று, 1996-சாம்பியன், 1999-முதல் சுற்று, 2003-அரைஇறுதி, 2007- 2வது இடம், 2011- 2வது இடம், 2015-கால்இறுதி, 2019-முதல்சுற்று



வங்காளதேசம் (ஐ.சி.சி. தரவரிசை- 8)

1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகம் ஆன வங்காளதேசம் கால்இறுதிக்கு மேல் சென்றதில்லை. ஆனால் பெரிய அணிகளுக்கு அடிக்கடி 'வேட்டு' வைப்பது அவர்களின் வாடிக்கை. 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியை லீக் சுற்றுடன் வங்காளதேசம் வெளியேற்றியதை யாரும் மறந்து விட முடியாது. அந்த போட்டியில் அரைசதம் விளாசிய ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம் இந்த உலகக் கோப்பை போட்டியிலும் நீடிக்கிறார்கள். இதே போல் கடந்த உலகக் கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை பதம் பார்த்தது.

இந்த ஆண்டில் வங்காளதேசத்தின் ஒரு நாள் போட்டி பயணத்தை புரட்டிப்பார்த்தால் அதில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான (ஆசிய கோப்பையில்) வெற்றி குறிப்பிடத்தக்கவை. கேப்டன் ஷகிப் அல்-ஹசன், தவ்ஹித் ஹிரிடாய், லிட்டான் தாஸ், துணை கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ரஹிம் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். இதில் ஷகிப் அல்-ஹசனுக்கு தான் பொறுப்பு அதிகம். கடந்த உலகக் கோப்பையில் 606 ரன்கள் குவித்த அவர் சுழலிலும் மிரட்டக்கூடியவர். அவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என்பதால் தாக்கத்தை ஏற்படுத்தும் வேட்கையுடன் உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது கூடுதல் ஊக்கமளிக்கும். 2023 உலகக் கோப்பையில் 4-5 வெற்றிகளை பெறுவது வங்காளதேசத்தின் குறிக்கோளாக இருக்கும்.

உலகக் கோப்பை நிலை: 1999-முதல் சுற்று, 2003-முதல் சுற்று, 2007-சூப்பர்8 சுற்று, 2011- முதல் சுற்று, 2015-கால்இறுதி, 2019-முதல்சுற்று



ஆப்கானிஸ்தான் (ஐ.சி.சி. தரவரிசை-9)

இதுவரை இரு உலகக் கோப்பை போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அதில் 15 ஆட்டங்களில் 14-ல் தோற்றுள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த முறை இந்தியாவில் போட்டி நடப்பதால் இங்குள்ள ஆடுகளத்தன்மை தங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த வகையில் இருக்கும் என்று அந்த அணி நிர்வாகம் கணக்கு போட்டுள்ளது. ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி, நூர் அகமது ஆகிய சுழல் தாக்குதலை அந்த அணி முழுமையாக சார்ந்து இருக்கிறது. குறிப்பாக உலகக் கோப்பை போட்டியில் தங்களது செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்றால், அதற்கு ரஷித்கான் சுழல் ஜாலத்தை காட்டியாக வேண்டும். இதே போல் பேட்டிங்கில் ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் சூப்பர் பார்மில் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு முக்கிய அணிக்கு 'ஆப்பு' வைத்தால் அதுவே ஆப்கானிஸ்தானுக்கு அமர்க்களமான தொடக்கமாக இருக்கும்.

உலகக் கோப்பை நிலை: 2015-முதல் சுற்று, 2019-முதல்சுற்று.



நெதர்லாந்து (ஐ.சி.சி. தரவரிசை-14)

நெதர்லாந்து அணி இந்த முறை உலகக் கோப்பை தகுதி சுற்றின் லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசை சூப்பர் ஓவரில் போட்டுத் தாக்கி அட்டகாசப்படுத்தியது. அதில் வெஸ்ட் இண்டீஸ் குவித்த 374 ரன்களை சமன் செய்ததோடு சூப்பர் ஓவரில் 30 ரன் எடுத்து சிலிர்க்க வைத்தது. பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங், லோகன் வான் பீக், தேஜா நிதாமனுரு உள்ளிட்டோர் தகுதி சுற்றில் கவனத்தை ஈர்த்தனர். இந்திய மண்ணில் ஓரிரு ஆட்டங்களில் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். அதனால் ஒவ்வொரு அணியினரும் இந்த ஆரஞ்சு நிற படையை எச்சரிக்கையாக எதிர்கொள்வார்கள். 5-வது முறையாக உலகக் கோப்பை போட்டியில் கால்பதிக்கும் நெதர்லாந்து உலகக் கோப்பையில் 20 ஆட்டங்களில் விளையாடி 18-ல் தோல்வியையே சந்தித்துள்ளது.

உலகக் கோப்பை நிலை: 1996-முதல் சுற்று, 2003-முதல் சுற்று, 2007-முதல் சுற்று, 2011- முதல் சுற்று.




பரிசுத்தொகை எவ்வளவு?

உலகக் கோப்பை போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ஏறக்குறைய ரூ.83 கோடியாகும். பரிசு விவரம் வருமாறு:-

சாம்பியன்- ரூ.33 கோடி

2-வது இடம்- ரூ.16½ கோடி

அரைஇறுதி தோல்வி- தலா ரூ.6½ கோடி

ஒவ்வொரு லீக் வெற்றி- ரூ.33 லட்சம்

லீக்குடன் வெளியேற்றம்- தலா ரூ.82 லட்சம்

இலங்கையும் தான்....

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு தடவையும் வீழ்த்தியதில்லை. சந்தித்த 7 முறையும் உதை வாங்கி இருக்கிறது என்பது அறிந்த சங்கதி. அவர்கள் மட்டுமல்ல, இப்படி ஒரு சோகத்தை இலங்கையும் சுமந்து கொண்டு இருக்கிறது. அந்த அணி உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 7 ஆட்டங்களிலும் தோல்வியே கண்டுள்ளது.

ஆடாம ஜெயிச்சேனடா...

1983-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணியில் ஆந்திராவைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சுனில் வல்சன் என்ற வீரரும் இடம் பிடித்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டம் அவர் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் ஆடாமல் உலகக் கோப்பையை கையில் ஏந்திய முதல் வீரர் இவர் தான். உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு கழற்றி விடப்பட்ட அவர் அதன் பிறகு இந்திய அணிக்கு ஒரு போதும் தேர்வு செய்யப்படவில்லை.

1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான இலங்கை அணியில் அங்கம் வகித்த மார்வன் அட்டப்பட்டுவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அனுபவம் இல்லாத இளம் வீரர் என்று முத்திரை குத்தி அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்து விட்டது. இதனால் அணியில் ஒரு பார்வையாளர் போன்றே இருந்தார். கடைசியில் அந்த அணியே கோப்பையை வென்றது. அதன் பிறகு அட்டப்பட்டு இலங்கையின் கேப்டன் அந்தஸ்து வரை உயர்ந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இவர்கள் இப்படி என்றால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கேல் பெவன் வேறு ரகம். 1999-ம் ஆண்டு மற்றும் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றிய போது, இவ்விரு இறுதி ஆட்டத்திலும் இடம் பிடித்திருந்தார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இவ்விரு ஆட்டங்களிலும் அவர் பேட்டிங்கும் செய்யவில்லை, பந்தும் வீசவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு கேட்ச் செய்யவில்லை. அவருக்கு 'வேலை' கொடுக்காமலேயே ஆஸ்திரேலியா கோப்பையை தூக்கி விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்