'பெண்கள் பிரிமீயர் லீக் போட்டி நிறைய சூப்பர் ஸ்டார்களை உருவாக்கும்' - ஜெமிமா ரோட்ரிக்ஸ் கருத்து

டெல்லி கேப்பிட்டல்ஸ் துணைகேப்டனாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Update: 2023-03-02 23:15 GMT

Image Courtesy : ANI

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நாளை (சனிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. நவிமும்பையில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக 5 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டன் மெக் லானிங் நேற்று நியமிக்கப்பட்டார். துணைகேப்டனாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

துணை கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கருத்து தெரிவிக்கையில், 'தென்ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் ஆஸ்திரேலியா அணியிடம் கண்ட தோல்வியால் நாங்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானோம். பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்காக நாங்கள் இங்கு வந்துள்ளதும், குடும்பத்தினருடன் 2 நாட்கள் பொழுதை கழித்ததும் எங்களது வேதனையை குறைக்க உதவிகரமாக இருந்தது.

எங்களது நீண்ட நாள் வேண்டுகோளான பிரிமீயர் லீக் போட்டியை நெருங்கி விட்டோம். பெண்கள் பிரிமீயர் லீக் போட்டி பெண்கள் கிரிக்கெட்டில் நிறைய மாற்றம் கொண்டு வரும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் இருந்து நிறைய சூப்பர் ஸ்டார்கள், பல மேட்ச் வின்னர்கள், பல தலைவர்கள் உருவாகுவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

இளம், சீனியர் வீராங்கனைகளை கொண்ட டெல்லி அணிக்கு மெக் லானிங் சிறந்த கேப்டனாக இருப்பார். பிக் பாஷ் லீக் போட்டியில் மெக் லானிங் கேப்டன்ஷிப்பில் நான் விளையாடி இருக்கிறேன். அவருடன் நெருங்கி பணியாற்ற கிடைத்து இருக்கும் இந்த வாய்ப்பின் மூலம் நான் நிறைய அனுபவங்களையும், தலைமை பண்புகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்