பெண்கள் பிரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றியை பெற்றது.;

Update: 2023-03-09 17:22 GMT

மும்பை,

5 அணிகள் பங்கேற்றுள்ள முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் அரங்கேறிய 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், டெல்லி கேப்பிட்டல்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த டெல்லி வீராங்கனைகள் தொடக்கம் முதலே திணறினர். ஷபாலி வர்மா (2 ரன்), அலிஸ் கேப்சி (6 ரன்), மரிஜானே காப் (2 ரன்) வரிசையாக நடையை கட்டினர். 2 முறை கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்ததால் ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் மெக் லானிங் தனது பங்குக்கு 43 ரன்கள் (41 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். பின்வரிசையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (25 ரன்), ராதா யாதவ் (10 ரன்) தவிர ேவறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

முந்தைய இரு ஆட்டங்களில் சர்வசாதாரணமாக 200 ரன்களை கடந்த டெல்லி அணியால் இந்த ஆட்டத்தில் 100 ரன்களை எட்டுவதே பெரும் பாடாகி விட்டது. 18 ஓவர்களில் அந்த அணி 105 ரன்னில் அடங்கியது. மும்பை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கா இஷாக், ஹெய்லி மேத்யூஸ், வேகப்பந்து வீச்சாளர் இசி வோங்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

மும்பை வெற்றி

பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில் விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா 41 ரன்களும் (32 பந்து, 8 பவுண்டரி), ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் (31 பந்து, 6 பவுண்டரி) திரட்டி வெற்றிப்பாதையை எளிதாக்கினர். மும்பை அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நாட் சிவெர் 23 ரன்னுடனும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி தொடர்ச்சியாக ருசித்த 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். ஏற்கனவே குஜராத், பெங்களூரு அணிகளை தோற்கடித்து இருந்தது. 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை வெகுவாக நெருங்கியுள்ளது. அதே சமயம் 3-வது லீக்கில் ஆடிய டெல்லி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- உ.பி. வாரியர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டியை ஸ்போர்ட்ஸ்18, கலர்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

குஜராத் கேப்டன் விலகல்

இதற்கிடையே, குஜராத் அணியில் பின்னங்காலில் காயமடைந்த கேப்டன் பெத் மூனி (ஆஸ்திரேலியா) எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லாரா வோல்வார்த் சேர்க்கப்பட்டு உள்ளார். துணை கேப்டன் சினே ராணா அணியை வழிநடத்துவார் என்று குஜராத் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்