பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத்-டெல்லி அணிகள் இன்று மோதல்...!
பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
மும்பை,
ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் போலவே பெண்களுக்கான (டபிள்யூ.பி.எல்) பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதலாவது சீசன் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
4வது மற்றும் 5வது இடங்களை பிடிக்கும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும். இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோத உள்ளன. 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 1 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் 3 ஆட்டங்களில் 1 வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் குஜராத் 4வது இடத்தில் உள்ளது.