பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது.

Update: 2023-01-13 22:26 GMT

பெனோனி,


ஐ.சி.சி.சார்பில் பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவின் பெனோனி, போட்செப்ஸ்ட்ரூம் ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டி 2021-ம் ஆண்டில் நடக்க வேண்டியது. கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்க உள்ளது.

இதில் களம் காணும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, ஜிம்பாப்வே, 'சி' பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'டி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் மொத்தம் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். இவை சூப்பர் சிக்சில் தலா 6 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு மல்லுக்கட்டும். சூப்பர் சிக்சில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கின்றன. இந்திய அணி ஷபாலி வர்மா தலைமையில் களம் இறங்குகிறது. சீனியர் அணியில் அதிரடியில் பட்டையை கிளப்பும் ஷபாலி வர்மாவுக்கு 18 வயதே ஆவதால் இந்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இதே போல சீனியர் அணியில் ஆடும் 19 வயதான விக்கெட் கீப்பர் ரிச்சா கோசும் அணியில் அங்கம் வகிப்பது கூடுதல் பலமாகும். இவர்கள் இருவரும் இணைந்து 121 சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர்.

இந்திய அணி லீக் ஆட்டங்களில் இன்று போட்டியை நடத்தும் ஒலுலே சியோ தலைமையிலான தென்ஆப்பிரிக்காவையும், 16-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 18-ந்தேதி ஸ்காட்லாந்தையும் எதிர்கொள்கிறது. முதல் சுற்றை தாண்டுவதில் இந்தியாவுக்கு சிக்கல் இருக்காது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் இருந்து கடும் சவால் காத்திருக்கிறது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியா கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

இன்றைய முதல் நாளில் மொத்தம் 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஆஸ்திரேலியா-வங்காளதேசம் (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி), ஐக்கிய அரபு அமீரகம்- ஸ்காட்லாந்து( பிற்பகல் 1.30 மணி), இந்தியா- தென்ஆப்பிரிக்கா (மாலை 5.15 மணி), இலங்கை-அமெரிக்கா (மாலை 5.15 அணி) அணிகள் மோதுகின்றன.அரைஇறுதி ஆட்டங்கள் (ஜன.27) மற்றும் இறுதிப்போட்டி (ஜன.29) போட்செப்ஸ்ட்ரூமில் நடக்கிறது. இந்த 3 ஆட்டங்களுக்கும் மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

ஷபாலி வர்மா (கேப்டன்), சுவேதா செராவத், ரிச்சா கோஷ், திரிஷா, சவும்யா திவாரி, சோனியா மெந்தியா, ஹர்லி காலா, ஹிரிஷிதா பாசு, சோனம் யாதவ், மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, திதாஸ் சாது, பலாக் நாஸ், ஷப்னம் ஷகில்.

Tags:    

மேலும் செய்திகள்