மகளிர் கிரிக்கெட்; ஷபாலி-மந்தனா அதிரடி...ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!
இந்திய அணி தரப்பில் ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
மும்பை,
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் நவிமும்பையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக லிட்ச்பீல்ட் 49 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சித்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ஆடினர். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 32 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 50 பந்தில் அரைசதம் அடித்தார்.
அரைசதம் அடித்த மந்தனா 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 145 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.