பெண்கள் கிரிக்கெட்: முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

மும்பையில் நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதுகின்றன.

Update: 2023-12-28 01:25 GMT

image courtesy: BCCI Women twitter

மும்பை,

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் மும்பையில் நடக்க உள்ளன. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 50 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ள இந்தியா அதில் 40-ல் தோல்வியை சந்தித்துள்ளது. 10-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 ஆட்டங்களில் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்த முறை முட்டுக்கட்டைபோடும் உத்வேகத்துடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஆல்-ரவுண்டர்கள் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்குர், சுழற்பந்து வீச்சாளர்கள் சினே ராணா, ஸ்ரேயங்கா பட்டீல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தயாராகி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவார்கள். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்