மகளிர் ஆசிய கோப்பை: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி- இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி

ஐக்கிய அரபு அமீரக அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

Update: 2022-10-04 13:42 GMT

Image Tweeted By @BCCIWomen

சில்ஹெட்,

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு ஆடியது. சில்ஹெட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ரிச்சா கோஷ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனை மேகனா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹேமலதா 2 ரன்களுக்கு அவுட்டானார்.

3ம் வரிசையில் இறங்கிய தீப்தி ஷர்மா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் அடித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஜெமிமா 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவிக்க, இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது.

இதையடுத்து 179 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே அடித்து 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்