பெண்கள் ஆஷஸ் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 116/5

பெண்கள் ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்துக்கு 268 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Update: 2023-06-25 18:53 GMT

image courtesy: England Cricket twitter

நாட்டிங்காம்,

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 473 ரன்களும், இங்கிலாந்து 463 ரன்களும் எடுத்தன. 10 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது. ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். சிறப்பாக விளையாடிய பெத் மூனி 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் குறைந்த ரன்களிலேயே அவுட்டாகினர். அந்த அணியின் கேப்டன் அலிசா ஹீலி 50 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக எம்மா லேம்ப், டாமி பியூமண்ட் களமிறங்கினர். அவர்கள் முறையே 28 மற்றும் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 9 ரன்களிலும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேனி வியாட் 20 ரன்னுடனும் கேட் கிராஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 5-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்