இலங்கைக்கு எதிரான வெற்றி "பாகிஸ்தானை விட சிறந்தது"-கவுதம் கம்பீர்
இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தானை விட சிறந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.;
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் நேற்று இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மல்லுகட்டின. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இதன்படி அவரும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகள், சரித் அசாலங்கா 4 விக்கெட்டுகள் மற்றும் மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதற்கு முந்தைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தானை விட சிறந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
''நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால் இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி இந்திய அணியினருக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். பேட்டிங் யூனிட் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. காயத்திற்குப் பிறகு ஜஸ்பிரித் பும்ரா திரும்பி வருவதில் சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் மீண்டு வந்து சிறப்பாக செயல்படுகிறார்" என்று கூறினார்.
மேலும் அவர், "ஒருநாள் கிரிக்கெட்டில் 214 ரன்கள் இலக்கை கொண்டு சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் இலங்கை போன்ற அணிக்கு எதிரான வெற்றி அணிக்கு நம்பிக்கையை அளிக்கும் . இது அணிக்கு ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர் உலகக்கோப்பைக்கும் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும். ஜஸ்பிரித் பும்ராவும், குல்தீப் யாதவும் சிறப்பாக செயல்பட தொடங்கும் தருணம் கேப்டனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது," என்றார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வரும் 15ஆம் தேதியன்று வங்காளதேச அணி உடன் விளையாட உள்ளது.