இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா..? - வங்காளதேசத்துடன் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4-வது வெற்றிக்கு குறிவைத்துள்ள இந்திய அணி இன்று வங்காளதேசத்துடன் மோதுகிறது.

Update: 2023-10-19 00:15 GMT

புனே,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி தேவையாகும்.

உலகக் கிரிக்கெட் திருவிழாவில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை போட்டியை சூப்பராக தொடங்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கிய இந்தியா 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா (ஒரு சதம் உள்பட 217 ரன்), விராட் கோலி (2 அரைசதத்துடன் 156 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஆகியோரின் அபார பேட்டிங்கும், ஜஸ்பிரித் பும்ரா (8 விக்கெட்), குல்தீப் யாதவ் (5 விக்கெட்), ஹர்திக் பாண்ட்யா (5), ஜடேஜா (5) உள்ளிட்டோரின் மிரட்டலான பந்து வீச்சும் இந்தியாவின் வீறுநடைக்கு துணை நிற்கின்றன. குறிப்பாக பாகிஸ்தானை 191 ரன்னில் சுருட்டி அந்த இலக்கை 30.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது இந்தியாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. அதே வேகத்துடன் 4-வது வெற்றியை நோக்கி பயணிக்கிறார்கள்.

வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் பரம எதிரி போல் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நிற்பார்கள். இதனால் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும். 



மாம்ப்ரே பேட்டி

சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி போன்ற வீரர்களுக்கு இந்த ஆட்டத்திலும் இடமிருக்காது என்று பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். 'சுழற்சி அடிப்படையில் வீரர்களை சேர்ப்பது குறித்து இப்போது எதுவும் விவாதிக்கப்படவில்லை. இதே வெற்றி உத்வேகத்தை அடுத்த ஆட்டத்திற்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் போன்ற தரமான வீரர்கள் வெளியே இருப்பதை பார்க்க கடினமாக இருக்கிறது. ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்காத வீரர்களிடம் முன்கூட்டியே பேசி தெளிவுப்படுத்தி விடுகிறோம்' என்று மாம்ப்ரே குறிப்பிட்டார்.

மேலும் அவர், 'நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். இந்த உலகக் கோப்பையில் 9 அணிகளுக்கு எதிராக, 9 இடங்களில், 9 விதமான ஆடுகளத்தில் விளையாடும் ஒரே அணி நாங்கள்தான். இத்தகைய வித்தியாசமான சவால்களுக்கு ஏற்ப தயாராகிறோம்' என்றார்.




 வங்காளதேசம் எப்படி?

இதுவரை 3 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக) கண்டுள்ள வங்காளதேச அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டும்.

பேட்டிங்கில் முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, லிட்டான் தாஸ், கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் உள்ளிட்டோர் குடைச்சல் கொடுக்கக் கூடியவர்கள். கடும் சவாலுக்கு வங்காளதேச அணியினர் ஆயத்தமாவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 40 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 8-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால் அதில் மோதிய 4 ஆட்டங்களில் 3-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றன.

மைதானம்

போட்டி நடக்கும் புனே மைதானத்தில் இந்திய அணி 7 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

இந்த மைதானத்தில் 8 முறை 300 ரன்னுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப்பிடித்து இந்தியா 356 ரன்கள் எடுத்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். விராட் கோலி இங்கு இரு சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொதுவாக இந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு ஒரு நாள் போட்டி நடக்காததால் ஆடுகளத்தன்மை தற்போது எப்படி மாறியிருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. வேகப்பந்து வீச்சுக்கும் ஓரளவு கைகொடுக்க வாய்ப்புள்ளது.

புனேயில் நேற்று லேசாக மழை பெய்தது. ஆனால் இன்று மழை ஆபத்து இல்லை என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹிரிடோய், மக்முதுல்லா, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்