தொடரை முழுமையாக வெல்லுமா இந்திய அணி? - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடக்கிறது

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

Update: 2023-01-24 00:23 GMT

இந்தூர்,

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அந்த அணியை 'ஒயிட்வாஷ்' செய்யும் வேட்கையுடன் இந்திய அணி களம் காணுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்தியா வலுவாக உள்ளது. முதலாவது ஆட்டத்தில் இரட்டைசதம் விளாசிய சுப்மன் கில் அடுத்த ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 40 ரன்கள் எடுத்து சூப்பர் பார்மில் இருக்கிறார். கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். விராட்கோலி 2 ஆட்டங்களிலும் (8, 11 ரன்) இடக்கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்ட்னெரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு முந்தைய ஆட்டத்தில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதல் ஆட்டத்தில் கடைசி கட்ட பந்து வீச்சில் சொதப்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கடந்த ஆட்டத்தில் மிரட்டலாக பந்து வீசினர். சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை சரியாக செய்தனர். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். தொடரை வென்று விட்டதால் இந்திய அணியின் பந்து வீச்சு கூட்டணியில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 350 ரன் இலக்கை நெருங்கி வந்து (337 ரன்கள்) தான் கோட்டை விட்டது. ஆனால் கடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 34.3 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் பேட்டிங்கில் மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ரன் சேர்க்கின்றனர். 'டாப் 6' பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சோபிக்க முடியாமல் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.

கடந்த மோசமான தோல்வியை ஒரு கசப்பான அனுபவமாக மறந்து சரிவில் இருந்து மீண்டு ஆறுதல் வெற்றியை பெற நியூசிலாந்து அணி எல்லா வகையிலும் போராடும். அதேநேரத்தில் இந்த தொடரை முழுமையாக (3-0) வென்றால் ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இந்தியா எட்ட முடியும் என்பதால் அந்த இலக்கை அடைய இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்தூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருப்பதுடன், இங்கு பவுண்டரி தூரம் குறைவானதாகவும் இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் 5 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, ஹென்றி நிகோல்ஸ் அல்லது மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், டக் பிரேஸ்வெல் அல்லது ஹென்றி ஷிப்லி அல்லது ஜேக்கப் டப்பி, லோக்கி பெர்குசன், பிளேர் டிக்னெர்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங் கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்