தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா பாகிஸ்தான்..? சென்னையில் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவுடன் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் பாகிஸ்தான் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

Update: 2023-10-27 00:16 GMT

சென்னை,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று சிக்கலில் தவிக்கிறது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா போராட்டம் என்பதில் சந்தேகமில்லை.

'அணி சரிவில் இருந்து மீள்வதற்காக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரும் ஆதரவாக நிற்கிறோம். ஊக்கப்படுத்துகிறோம். ஆனால் உலகக்கோப்பை முடிந்ததும் செயல்பாட்டை ஆராய்ந்து, அணியின் நலன் கருதி அதிரடி முடிவு எடுப்போம்' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு ஆபத்து என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. இதுவும் பாபர் அசாமுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். 



ஆப்கானிஸ்தானுடன் தோல்வியால்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது. 282 ரன்கள் சேர்த்த போதிலும் அதை வைத்து ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த முடியாமல்போய் விட்டது.

சொதப்பலான சுழற்பந்து வீச்சும், மந்தமான பீல்டிங்கும் தான் தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் கேப்டன் பாபம் அசாம் புலம்பி தீர்த்தார். சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவானது. சுழலுக்கு உகந்தது. அதனால் ஷதப் கான், முகமது நவாஸ் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதே போல் பேட்ஸ்மேன்களும் ஒருசேர கைகொடுக்க வேண்டும். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (302 ரன்) நன்றாக ஆடுகிறார். கேப்டன் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், இப்திகர் அகமது ஆகியோரும் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை அடையலாம். 



மிரட்டும் தென்ஆப்பிரிக்கா

யாரும் எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி 4-ல் வெற்றி (இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வி (நெதர்லாந்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.

பேட்டிங்கில் எதிரணி பவுலர்களை திணறடிக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் நடப்பு தொடரில் 4 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதில் இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தது அடங்கும். குயின்டான் டி காக் (3 சதத்துடன் 407 ரன்), ஹென்ரிச் கிளாசென் (15 சிக்சருடன் 288 ரன்), எய்டன் மார்க்ரம் (265 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, கோட்ஜி, யான்சென் (தலா 10 விக்கெட்), கேஷவ் மகராஜ் (7 விக்கெட்) கலக்குகிறார்கள். சரியான நேரத்தில் தென்ஆப்பிரிக்க அணி சிறந்த நிலையை அடைந்திருக்கிறது.

ஆனால் சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம். மொத்தத்தில் தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் அந்த அணியினர் களத்தில் வரிந்து கட்டுவார்கள்.

ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 82 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 51-ல் தென்ஆப்பிரிக்காவும், 30-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக்கோப்பையில் மோதிய 5 ஆட்டங்களில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

பிற்பகல் 2 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், ஷதப் கான், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, உஸ்மா மிர், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது லிசாத் வில்லியம்ஸ்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்