இங்கிலாந்து அணிக்கு ஈடுகொடுக்குமா ஆப்கானிஸ்தான்..? டெல்லியில் இன்று மோதல்

உலகக் கோப்பை தொடரில் டெல்லியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Update: 2023-10-15 00:15 GMT

புதுடெல்லி,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து வலுவாக மீண்டெழுந்த இங்கிலாந்து அடுத்த ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை துவம்சம் செய்தது.

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவித்ததுடன் எதிரணியை 227 ரன்னில் அடக்கி எளிதில் வெற்றி வாகை சூடியது. பேட்டிங்கில் டேவிட் மலான் சதமும், ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகியோர் அரைசதமும் விளாசினர். பந்து வீச்சில் ரீஸ் டாப்லே, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், மார்க்வுட், அடில் ரஷித், விலிங்ஸ்டன் ஆகியோரும் விக்கெட் வீழ்த்தி அசத்தினர். முதலாவது ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த பந்து வீச்சாளர்கள் அடுத்த ஆட்டத்தில் கச்சிதமாக பந்து வீசி கலக்கினர். பேட்டிங்கும் நன்றாக இருந்தது.

நல்ல நிலைக்கு திரும்பி இருக்கும் இங்கிலாந்து அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிப்பதுடன், நிகர ரன்-ரேட்டையையும் அதிகரிக்க முனைப்பு காட்டும்.

எழுச்சி பெறுமா?

ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் அடுத்தடுத்து உதை வாங்கி இருக்கிறது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் பணிந்தது. முதலாவது ஆட்டத்தில் 156 ரன்னில் சுருண்ட ஆப்கானிஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் 272 ரன்கள் (இந்தியாவுக்கு எதிராக) சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் தொடர்ந்து நல்ல தொடக்கம் கொடுக்க தவறி வருகின்றனர். முந்தைய ஆட்டத்தில் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷகிடி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ஆகியோர் அரைசதம் அடித்து அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். மற்றவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இதேபோல் பந்து வீச்சும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. பசல்ஹக் பரூக்கி, முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், ரஷித் கான் ஆகிய பவுலர்களிடம் இருந்து இன்னும் சிறந்த திறன் வெளிப்படவில்லை. பேட்டிங், பந்து வீச்சில் அந்த அணி முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

எதிர்பாராத வகையில் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் கொண்ட கணிக்க முடியாத ஆப்கானிஸ்தான் அணி எழுச்சி கண்டு முதல் வெற்றியை பதிவு செய்ய எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக ஒருசேர எல்லா துறையிலும் அபாரமாக செயல்பட்டால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் ஈடுகொடுக்க முடியும். 



ரன் மழைக்கு வாய்ப்பு

இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டியில் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. உலகக் கோப்பை தொடரில் மோதிய அந்த இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணியே வெற்றி கண்டுள்ளது. டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதேபோல் அங்கு நடந்த அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 273 ரன் இலக்கை இந்தியா 35 ஓவர்களில் எளிதாக எட்டிப்பிடித்தது. எனவே முந்தைய ஆட்டங்களை போல் இந்த ஆட்டத்திலும் ரன் மழைக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க்வுட், ரீஸ் டாப்லே.

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, நஜ்புல்லா ஜட்ரன், ரஷித் கான், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்