அணியில் ஆல்-ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் ஏன்? ரோகித் சர்மா விளக்கம்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Update: 2023-09-06 09:44 GMT

image courtesy;AFP

கண்டி,

உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நேற்று இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் அறிவித்தார். ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை அணியை அறிவித்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

வீரர்கள் அணியில் தங்களது இடத்திற்கு போராடுவது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல. சவால்கள் அதிகரிக்கும் போது அணித் தேர்வும் கடினமாகி விடுகிறது. ஆனால் யார் பார்மில் இருக்கிறார்? எதிரணி எது? இது போன்ற சூழலில் சிறப்பாக செயல்படும் வீரர் யார்? எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். இப்படி நடக்கும் போது நாம் விளையாடும் அணியில் சிலரை தவற விடுகிறோம். இது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று தான். அணியின் நன்மைக்காக இப்படி கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டியுள்ளது.

அணித் தேர்வின் ஆலோசனையில் நிறைய வீரர்கள் குறித்து பரிசீலித்தோம். இறுதியில் 15 பேர் கொண்ட மிகச்சிறந்த அணியை தேர்வு செய்திருப்பதாக நம்புகிறோம். எங்களது கன கச்சிதமான அணிச்சேர்க்கை இது தான். அணித்தேர்வு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது.

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முழுமையான ஒரு வீரர். பேட்டிங்கும் செய்கிறார். பந்தும் வீசுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது அருமையான பேட்டிங்கை பார்த்து இருப்பீர்கள். அத்துடன் கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பந்து வீச்சிலும் முத்திரை பதிக்கிறார். உலகக்கோப்பை போட்டியில் அவரது 'பார்ம்' நமக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

தற்போது பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை நீங்கள் பார்த்தாலே ஏன் அணியில் ஆல்-ரவுண்டர் தேவை என்பது புரிந்திருக்கும். அந்த ஆட்டத்தில் நாம் 266 ரன்கள் எடுத்திருந்தோம். இன்னும் பேட்டிங் தெரிந்த பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கூடுதலாக 15 ரன் கிடைத்திருக்கும். இந்த 15 ரன் வித்தியாசம் என்பது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கக்கூடியது. எனவே பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் குறித்து பல முறை பேசி இருக்கிறேன். இதனால் அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு 4 ஆல்-ரவுண்டர்கள் (பாண்ட்யா, ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்குர்) தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி சில சமயம் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்கள் விட்டுக்கொடுக்கும் போது, அவர்கள் தங்களது 10 ஓவர்களை முழுமையாக வீச முடியாத நிலை உருவாகும். அப்போது ஆல்-ரவுண்டர்கள் கைகொடுப்பார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அணியில் ஆல்-ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்