பாண்ட்யா இடத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டது ஏன்?- டிராவிட் விளக்கம்

உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Update: 2023-11-05 05:52 GMT

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இதில் இந்தியா முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறியது. இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அரையிறுதி ஆட்டத்திலும் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக ஏற்கனவே உலகக்கோப்பைக்கு தேர்வாகி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறிய மற்றொரு ஆல் ரவுண்டர் அக்சர் படேல் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக பாண்ட்யா இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தேர்வாகியுள்ளது எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தங்களுடைய அணியில் டாப் 7 பேட்ஸ்மேன்கள் வலுவாக இருப்பதாலும் 5 பவுலர்கள் தரமாக இருப்பதாலும் எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் தேவை என்று கருதி பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்துள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "பாண்ட்யா காயமடைந்த பின் நாங்கள் 3 வேகம் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் விளையாடி வருகிறோம். மேலும் சுழல் மற்றும் ஆல் ரவுண்டர் பிரிவில் எங்களிடம் பேக் அப் வீரர்கள் இருக்கிறார்கள்.

எனவே இந்த கலவையில் இருக்கும் வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே அதற்கு தகுந்த பேக் அப் தேவை என்பதை கண்டறிந்தோம். எங்களுடைய டாப் 7 பேட்டிங் வரிசையில் தேவையான தரம் இருக்கிறது. அத்துடன் 8, 9, 10, 11 இடங்களில் தற்போது விளையாடும் வீரர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் தற்போது இருக்கும் வீரர்கள் கடினமாக உழைத்து தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.

அதனால் எங்களுக்கு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் தேவை என்று நினைக்கவில்லை. குறிப்பாக 50 ஓவர்கள் முழுவதும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடும் அளவுக்கு டாப் 7 பேட்ஸ்மேன்களில் தேவையான தரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்" என விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்