டி20 உலகக்கோப்பையை கைப்பற்றப்போவது யார்..? இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளின் பலம், பலவீனம் என்ன..?

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறியுள்ளன.

Update: 2024-06-28 07:58 GMT

பார்படாஸ்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளின் பலம், பலவீனம் குறித்து காண்போம்:-

தென் ஆப்பிரிக்கா:

ஐ.சி.சி. 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பைகள் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்கா முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாத அந்த அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தனை 56 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது.

பலம்:

அந்த அணியின் பிரதான பலமே வேகப்பந்து வீச்சுதான். அந்த அணியில் ரபடா, நோர்ஜே மற்றும் மார்கோ ஜான்சன் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சிலும் ஷாம்சி அணிக்கு வலு சேர்க்கிறார்.

பேட்டிங் துறையில் டி காக் அணிக்கு வலு சேர்த்து வருகிறார். ஐ.பி.எல். தொடரில் அசத்திய ஸ்டப்ஸ் மிடில் வரிசையில் அணிக்கு ரன் சேர்க்கிறார். மில்லர் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தக்க சமயத்தில் பார்முக்கு திரும்பியுள்ளார். இது அணிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. 

பலவீனம்:

தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் துறை பலவீனமாக காணப்படுகிறது. பேட்டிங் துறையில் டி காக் மட்டுமே அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. அனைவரும் ஒரே சேர்ந்து அசத்தும் நிச்சயம் இறுதிப்போட்டி இந்தியாவுக்கு சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா:

நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி 2-வது டி20 உலகக்கோப்பைக்கு குறிவைத்துள்ளது.

பலம்:

இந்திய அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பேட்டிங்கை விட பந்துவீச்சு ஒரு படி மேலே உள்ளது. வேகப்பந்து வீச்சில் பும்ரா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து அர்ஷ்தீப் சிங்கும் அணிக்கு வலு சேர்க்கிறார். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை அக்சர் படேல், குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுகின்றனர்.

ஐ.பி.எல். தொடரில் சொதப்பினாலும் தக்க சமயத்தில் பார்முக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்ட்யா மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார்.

இந்திய அணியின் பேட்டிங் துறையின் ஆணி வேராக கேப்டன் ரோகித் செயல்பட்டு வருகிறார். கடைசி 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ள அவருடன் இணைந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

பலவீனம்:

இந்திய அணியில் தற்போது பேட்டிங் வரிசை சற்று பலவீனமாக உள்ளது. டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இந்த தொடரில் சொதப்பி வருகிறார். 7- போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் கூட இன்னும் அடிக்கவில்லை. 2 டக் அவுட்டுகளும் அடங்கும்.

இறுதிப்போட்டியில் அவர் அசத்தும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் துறை மேலும் வலுப்பெறும். ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஷிவம் துபே இதில் தடுமாறி வருகிறார். அவர் எழுச்சி பெற்றால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுப்பெறும்.

பந்து வீச்சை பொறுத்த வரை இந்திய அணியில் பும்ராவை தவிர மற்ற பவுலர்கள் யாரும் உலகத்தரம் வாய்ந்த அளவில் இல்லை. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் முக்கியமான நேரத்தில் சொதப்பினால் அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும்.

சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் குல்தீப் யாதவ் மட்டுமே பிரதான வீரராக உள்ளார். மற்ற ஸ்பின்னர்களாக ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா மர்றும் அக்சர் படேல் உள்ளனர். இதில் ஜடேஜா இன்னும் நடப்பு தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட முழுமையாக 4 ஓவர்கள் பந்து வீச வில்லை. அக்சர் படேலும் ஆல் ரவுண்டர் என்பதால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்