இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாசிம் அக்ரம் பாராட்டு...!

உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Update: 2023-11-16 09:56 GMT

மும்பை,

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை வாசிம் அக்ரம் வெகுவாக பாராட்டியுள்ளார். ஆரம்பத்திலேயே புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டலை கொடுக்கக்கூடிய டிரென்ட் பவுல்ட் போன்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரோகித் சர்மா அடித்த 47 (29) ரன்கள் தான் இந்தியா 398 ரன்கள் அடிப்பதற்கான அடித்தளத்தை கொடுத்ததாக அவர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு;- "இந்தியா பைனலுக்கு செல்வதற்கு தகுதியான அணி. ஏனெனில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அவர்கள் முழுமையான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கேப்டன் அணியை முன்னின்று வழி நடத்தினார். இருப்பினும் நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகம் பேச மாட்டோம். ஏனெனில் அவர் சதம் அல்லது இரட்டை சதமடிக்கவில்லை.

ஆனால் அவர் கொடுத்த துவக்கம் அபாரமானது. குறிப்பாக 29 பந்துகளில் 47 ரன்கள் அடித்த அவர் முதல் 10 ஓவர்களில் இந்தியா 84 ரன்கள் குவிக்க உதவினார். அவர் கொடுத்த துவக்கமே இந்தியா பெரிய ஸ்கோர் குவிப்பதற்கான நல்ல அடித்தளத்தை கொடுத்தது. மேலும் ரோகித் விளையாடியதை பாருங்கள். ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய அவர் பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். அங்கிருந்து இந்தியா எளிதாக 397 ரன்கள் அடித்து வெற்றி கண்டது' என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்