கோலி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வினை விளையாட வைத்தது சரியானது- முன்னாள் பாக். வீரர் கருத்து
ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என பிரபல வீரர் தெரிவித்துள்ளார்.;
கராச்சி,
8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. குறிப்பாக இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்த முதல் அணி என்ற மோசமான சாதனையையும் இந்திய அணி படைத்து உள்ளது.
இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி, அணியின் வீரர்கள் தேர்வு மீது பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகளவில் விவாதித்து வருகின்றனர். டி20 போட்டிகளில் முன்னணி பந்துவீச்சாளரான சாஹலுக்கு அணியில் முக்கியத்துவம் கொடுக்காததும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் உலகக் கோப்பை தோல்வி குறித்து அவர் பேசுகையில்" இங்கிலாந்துக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சோபிக்கவில்லை. புவனேஷ்வர் குமார் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் ஆர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட வேண்டும்.
விராட் கோலி அவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைத்தது சரியான முடிவு. ஆப்-ஸ்பின் பந்து வீசாத ஒருவரை ஆப் ஸ்பின்னர் என்ற பெயரில் நீங்கள் விளையாட வைக்கிறீர்கள். நீங்கள் எப்படி அவரை டி20 போட்டியில் விளையாட வைக்க முடியும்?," என்றார். இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.