விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அரியானா அணி

அரியானா அணிக்கு எதிரான அரைஇறுதியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி தோல்வியை தழுவியது.

Update: 2023-12-13 19:04 GMT

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - அரியானா அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அரியானா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அரியான அணி ஹிமான்ஷு ராணாவின் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தமிழக அணிக்கு 294 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அரியானா அணி தரப்பில் அதிகபட்சமாக ஹிமான்ஷு ராணா 116 ரன்களும், யுவராஜ் சிங் 65 ரன்களும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய 5 முறை சாம்பியனான தமிழக அணி 47.1 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் அரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 64 ரன்னும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 31 ரன்னும், என்.ஜெகதீசன் 30 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ராஜஸ்தான்-கர்நாடகா (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்