துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல - முகமது ஷமி டுவீட்
போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.;
சென்னை,
உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற இந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஆடியது. ஆரம்பத்தில் 3 விக்கெட்டை பறிகொடுத்தாலும் அதன்பின்னர் பொறுமையாக ஆடி அந்த அணி வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுததையும் காண முடிந்தது.
அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியும் இந்தியா இந்த முறை கோப்பையை வென்றுவிடும் என்றே நினைத்த பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல. போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். டிரெஸ்ஸிங் அறைக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்திய பிரதமருக்கு நன்றி...மீண்டும் வருவோம்...மீண்டு வருவோம்.. என பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இந்திய வீரர் ஜடேஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,
நாங்கள் அனைவரும் மனம் உடைந்திருந்தோம். நேற்று டிரெஸ்ஸிங் அறைக்கு வந்து பிரதமர் மோடி எங்களிடம் பேசியது ஊக்கமளிப்பதாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.