டி.என்.பி.எல். முதலாவது தகுதி சுற்று: கோவைக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர்

முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது.;

Update: 2024-07-30 15:37 GMT

Image Courtesy : @TNPremierLeague

திண்டுக்கல்,

8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த கோவை கிங்ஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடம் வகிக்கும் ஷாருக்கான் தலைமையிலான நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தனர். அமித் சாத்விக் 67 ரன்களில் கேட்ச் ஆனார். துஷார் ரஹேஜா 55 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

முகமது அலி 45 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கோவை அணி விளையாடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்