இந்திய அணியின் வருங்கால கேப்டனாக இருக்க இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு - முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது.

Update: 2023-06-21 13:12 GMT

Image Courtesy: AFP

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. ஏனெனில் தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய வேளையில் அதற்கு அடுத்து வந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது கேப்டன்சியின் கீழ் இந்திய அணியால் ஐ.சி.சி கோப்பைகளை கைப்பற்ற முடியவில்லை.

அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரோடு ரோகித் சர்மாவின் கேப்டன்சி வாய்ப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்து இந்திய அணியில் வருங்கால கேப்டன் யார்? என்பது குறித்த கேள்வியே பலரது மத்தியிலும் உள்ளது.

அதேபோன்று அடுத்த கேப்டனாக யார் வரவேண்டும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த 2005 முதல் 2008 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த புபிந்தர் சிங் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக வருவதற்கு சுப்மன் கில் தகுதியானவர் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இந்திய அணியில் உள்ள வீரர்களில் தற்போது சுப்மன் கில் பிரகாசமான ஒரு வீரராக காணப்படுகிறார். இளம் வீரரான அவர் அடுத்த பேட்டி லெஜன்ட்டாக மாற முடியும். தற்போதைக்கு சுப்மன் கில்லை கேப்டனாக யோசிக்க முடியாவிட்டாலும் இன்னும் சில காலங்கள் தன்னுடைய திறனை அவர் தொடர்ச்சியாக நிரூபிக்கும் வேளையில் நிச்சயம் வருங்கால கேப்டனாக மாற அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சுப்மன் கில் கடந்த சில தொடர்களாகவே அற்புதமான பார்மில் விளையாடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகள், 24 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்