பயிற்சியாளராக கம்பீர் மற்றும் டிராவிட் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் - ரிஷப் பண்ட்

ராகுல் டிராவிட் வெற்றி தோல்விகளைப் பற்றி பார்க்காமல் எப்போதும் சமநிலையுடன் இருப்பார் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

Update: 2024-09-06 15:07 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக 2 கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன் 2024 சீசனில் ஆலோசகராக செயல்பட்ட அவர் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர்.

அதன் காரணமாக டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பின் கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். அவருடைய தலைமையில் இலங்கை டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது. அதனால் முதல் சுற்றுப்பயணத்திலேயே கம்பீர் சில கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.

இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெற்றி தோல்விகளைப் பற்றி பார்க்காமல் எப்போதும் சமநிலையுடன் இருப்பார் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். ஆனால் கம்பீர் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் வீரர்களிடம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த 2 பயிற்சியாளர்களின் வித்தியாசம் பற்றி ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு:-

"ஒரு மனிதராகவும் பயிற்சியாளராகவும் ராகுல் பாய் மிகவும் சமநிலையானவர் என்று நான் கருதுகிறேன். அதில் நல்லதும் கெட்டதும் இருக்கலாம். அதில் தனி நபர்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து நன்மைகளும் தீமைகளும் இருக்கும். மறுபுறம் கவுதம் பாய் மிகவும் ஆக்ரோஷமானவர். உண்மையில் அவர் நீங்கள் வெல்ல வேண்டும் என்ற ஒருதலைபட்சமான கோட்பாட்டை கொண்டவர். இருப்பினும் நீங்கள் எப்போதும் சரியான சமநிலையை பின்பற்றி முன்னேறுவதற்கான வழியை கண்டறிய வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்