இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்பதை 'இந்தியன்' என மாற்றிய வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியில் நீண்ட நாட்களாக இடம்பெறவில்லை.

Update: 2023-07-28 10:22 GMT

டெல்லி,

இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இவர் பந்தை 'ஸ்விங்' செய்வதில் வல்லவர். இவரது 'ஸ்விங்'பந்துவீச்சுக்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தவர் புவனேஷ்வர் குமார். டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில்  கைப்பற்றாவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசக்கூடியவர். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. காயம் சரியான பின்பும் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

33 வயதான புவனேஷ்வர் குமார்,கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த போது அவரது இடத்தை இளம் வீரர்கள் பிடித்து விட்டனர்.அதன் பிறகு அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார்.  இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இதில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

புவனேஷ்வர் குமார் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றி 'இந்தியன்' என மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற அச்சத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவரது ஓய்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்