ஆசிய கோப்பை விவகாரம்: இந்திய அணியை ஐசிசி நீக்க வேண்டும் - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் காட்டம்

ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் தெரிவித்தார்

Update: 2023-02-07 09:35 GMT

Image Courtesy : AFP 

கராச்சி,

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் தெரிவித்தார்

 இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. நான் இதை எப்போதும் சொல்லி வருகிறேன். எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை இருக்கிறது. இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது ஐ.சி.சி.யின் வேலையாகும். அப்படி செய்யவில்லை என்றால் ஐ.சி.சி.யால் எந்த அர்த்தமும் இல்லை. ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும். எல்லா நாட்டுக்கும் ஒரு விதியை வைத்திருக்க வேண்டும். அணிகள் விளையாட மறுத்தால் அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஐ.சி.சி. அவர்களை நீக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது ஏன்? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும்.

விளைவுகளை பற்றி அவர்கள் பயப்படுகிறார்கள். பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நகரத்துக்குதான் அவர்கள் செல்வார்கள். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜாவித் மியான்டட் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்