வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முகமது ஷமிக்கு பதிலாக ஜெய்தேவ் உனத்கட்டை அணியில் சேர்க்க வாய்ப்பு
காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக ஜெய்தேவ் உனத்கட்டை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
மேலும், வங்காள தேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத் கட் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல் கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்ததால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.