டெஸ்ட் போட்டி: 106 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்...தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா...!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
ஜோகன்ஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 87 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 320 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஹோல்டரின் அரைசதத்தின் உதவியுடன் 251 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 71 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 321 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் கேப்டன் தெம்பா பவுமா 172 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் பிராத்வெய்ட் 18 ரன், சந்தர்பால் 2 ரன், ரேய்மான் 0 ரன், பிளாக்வுட் 4 ரன், ரோஸ்டான் சேஸ் 0 ரன், கைல் மேயர்ஸ் 7 ரன் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் அந்த அணி 34 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதையடுத்து ஜோடி சேர்ந்த சில்வா, ஹோல்டர் இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடியது. இறுதியில் அந்த அணி 35.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் தென் ஆப்பிரிக்கா 284 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. டெஸ்ட் தொடர் முடிவடைந்ததால் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.