டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்த சாத் ஷகீல்... முதலிடத்தில் இந்த இந்திய வீரரா..?
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சாத் ஷகீல் 141 ரன்கள் குவித்தார்.;
ராவல்பிண்டி,
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அதிகபட்சமாக ரிஸ்வான் 171 ரன்களும், சாத் ஷகீல் 141 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மக்மூத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 3-வது நாளில் 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் சேர்த்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷேசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
சாதனை பட்டியலில் இணைந்த சாத் ஷகீல்:-
சாத் ஷகீல் இந்த ஆட்டத்தில் அடித்த 141 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சராசரி 65.17 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடும் வீரர்களில் (ஓய்வு பெற்ற வீரர்களை தவிர்த்து) அதிக சராசரி கொண்ட வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரரான ஜெய்ஸ்வால் 68.53 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ஜெய்ஸ்வால் - 68.53 சராசரி
2.சாத் ஷகீல் - 65.17 சராசரி
3.ஹாரி புரூக் - 59.75 சராசரி
4.ஸ்டீவ் சுமித் - 56.97 சராசரி
5.கேன் வில்லியம்சன் - 54.98 சராசரி.