சிட்னி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.;

Update: 2025-01-02 23:04 GMT

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தற்போது தொடங்கியுள்ளது. அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். இதனால் துணை கேப்டன் பும்ரா கேப்டாக செயல்படுகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணியில் ரோகித்துக்கு பதிலாக சுப்மன் கில் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார். அதேபோல, காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ்தீப் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மிட்சேல் மார்ஷுக்கு பதிலாக புதுமுக ஆல்ரவுண்டர் வெப்ஸ்டர் இடம்பெற்றுள்ளார்.  

பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்க வேண்டுமெனில், இந்த போட்டியை இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டியது அவசியமானதாகும். இதனால், இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்