அனைத்தையும் முதலில் இருந்து தொடங்குங்கள் - இந்திய சுழற்பந்து வீச்சாளருக்கு இம்ரான் தாஹிர் அறிவுரை..!
கடந்த டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் அணியில் இடம்பெற்றிருந்ததால் பிளேயிங் 11-ல் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இருப்பினும் இந்த அணியில் கேஎல் ராகுல் போன்ற சில மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வரிசையில் இந்திய அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்த யுஸ்வேந்திர சாஹல் இந்த தொடரிலும் கழற்றி விடப்பட்டுள்ளார்.
2016இல் அறிமுகமான சாஹல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஓரளவு நிலையான இடத்தைப் பிடித்தார். இருப்பினும் 2021 ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதால் அந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். பின்னர் கடந்த டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் அணியில் இடம்பெற்றிருந்ததால் பிளேயிங் 11-ல் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் அபாரமாக செயல்பட்ட குல்தீப் யாதவ் இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னருக்கான இடத்தை பிடித்து விட்டதாலேயே சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார். எனவே சாஹல் இழந்த இடத்தை பிடிக்க அனைத்தையும் முதலில் இருந்து துவங்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-
"சாஹல் சிறப்பாக பந்து வீசவில்லை என்று நான் கருதவில்லை. அவருடைய பவுலிங் நன்றாக இருக்கிறது. அதனால் சாஹல் நீக்கப்படவில்லை. மாறாக குல்தீப் யாதவ் அவரை விட சிறப்பாக செயல்பட்டு ஒரு படி முன்னே இருக்கிறார். அவர் ஜடேஜாவுடன் சேர்ந்து இந்திய அணியில் சரியான கலவையை உருவாக்குகிறார். எனவே சாஹல் இழந்த இடத்தை பிடிக்க அனைத்தையும் மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும் . ஏனெனில் குல்தீப் யாதவ் தமக்கு கிடைத்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார். எனவே சாஹல் தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். மிகவும் நல்ல பவுலரான அவர் விரைவில் கம்பேக் கொடுப்பார்" என்று கூறினார்.