நெதர்லாந்திடம் தோற்றதற்கு இதுதான் காரணம்..! தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கருத்து
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் தோல்வியை தழுவியது.;
தர்மசாலா,
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பவுமா 16 ரன், டிகாக் 20 ரன், அடுத்து களம் இறங்கிய வென் டர் டெசன் 4 ரன், மார்க்ரம் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து 44 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.இதையடுத்து மில்லர் மற்றும் க்ளாசென் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. நிதானமாக ஆடிய க்ளாசென் 28 ரன்னில் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் மில்லரும் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், தென் ஆப்பிரிக்காவின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி, பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை அசால்டாக தோற்கடித்த தாங்கள் இந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்ததாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "அவர்களை 112/6 என்று ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்திய நாங்கள் 200 ரன்கள் தாண்ட விட்டிருக்க கூடாது. அதை நாங்கள் செய்ய தவறினோம். ஆனால் இந்த இலக்கை சேசிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களிடமிருந்தது. இருப்பினும் அவர்கள் எங்களுடைய பேட்டிங்கில் இருந்த குறைகளை வெற்றிகரமாக பயன்படுத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசத்திய நாங்கள் இந்த ஆட்டத்தில் எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்திருக்க கூடாது. அதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிப்படுத்திய பீல்டிங் இந்த ஆட்டத்தில் வெளிப்படவில்லை. இந்த தோல்வி வலியால் நாங்கள் உடைந்துள்ளோம். ஆனாலும் எங்களுடைய பயணம் முடிந்துவிடவில்லை. எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வெற்றி கண்ட நெதர்லாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.