செல்பி எடுக்க வந்த ரசிகரை தாக்க முயன்ற ஷகிப் அல் ஹசன் - வைரலாகும் வீடியோ
செல்பி எடுக்க வந்த ரசிகரை தாக்க முயன்ற ஷகிப் அல் ஹசனின் வீடியோ வைரலாகி வருகிறது.;
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். இவர் வங்காளதேச அணிக்கு பல போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர், இதுவரை 67 டெஸ்ட், 247 ஒருநாள் மற்றும் 117 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில், தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை ஷகிப் அல் ஹசன் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஷகிப் சக வீரர்களுடன் மைதானத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ரசிகர் ஷகிப் உடன் செல்பி எடுக்க முயன்றார்.
இதனால் கோபமடைந்த ஷகிப், ரசிகரின் மொபைல் போனை புடுங்க முயன்றார். மேலும் ரசிகரின் கழுத்தை பிடித்து தாக்க முயன்றார். இதனை தொடர்ந்து அந்த ரசிகர் சோகமாக அங்கிருந்த சேரில் உட்கார்ந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் ஷகிப்பின் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர்.
ஷகிப் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வங்காளதேச உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ-விற்கு அவுட் கொடுக்காதபோது அம்பயரை தரக்குறைவாக விமர்சித்ததோடு, ஸ்டம்புகளையும் கால்களால் உதைத்து தள்ளினார். தொடர்ந்து இதேபோல் மற்றொரு முறை நடக்க ஸ்டம்புகளை தூக்கி எறிந்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.