வங்காளதேசத்திற்கு எதிரான தொடர்: வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது என்ன..?
வங்காளதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.;
கான்பூர்.
இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.இந்நிலையில்,வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது,
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பயிற்சியாளரின் கீழ் விளையாடி வருகிறோம். ராகுல் டிராவிட் எங்களது அணியின் பயிற்சியாளராக இருந்து சிறப்பான நேரத்தை வழங்கி இருந்தார். தற்போது அவரை கடந்து கவுதம் கம்பீருடன் பயணித்து வருகிறோம். ஏற்கனவே நான் அவருடன் விளையாடி இருப்பதால் அவர் என்ன மனநிலையோடு இருப்பார் என்பதை எனக்கு தெரியும்.
அதோடு வீரர்கள் எவ்வாறு விளையாட விரும்புகிறார்களோ அதன்படியே அவர்களுக்கு சுதந்திரத்தையும் அவர் வழங்குவார் என்றும் தெரியும். இந்த போட்டியில் நாங்கள் கிட்டத்தட்ட இரண்டரை நாட்களை மழையால் தவற விட்டதால் நான்காவது நாளில் எவ்வளவு விரைவாக ரன்களை குவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ரன்களை குவித்தோம். நிச்சயம் வேகமாக ரன்களை குவித்துவிட்டு மீண்டும் வங்காளதேச அணியை பந்துவீச்சில் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம்.
இந்த போட்டியின் போது நாங்கள் பேட்டிங் செய்கையில் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. இருந்தாலும் 100 முதல் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானாலும் பரவாயில்லை. இந்த போட்டியின் முடிவினை பெற வேண்டும் என்பதற்காகவே அதிரடியாக விளையாடினோம். இறுதியில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
இந்த போட்டியில் எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் சிறப்பாக விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் நிறைய விளையாடியுள்ளதால் இதேபோன்ற தரமான செயல்பாடு வெளிவரும். அவர் நீண்ட ஸ்பெல்களை ஓய்வின்றி வீசுகிறார். நல்ல திறன்களையும் வைத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.