சச்சின் தெண்டுல்கரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் தற்கொலை

மராட்டியத்தின் பாந்திரா நகரில் உள்ள சச்சின் தெண்டுல்கரின் வீட்டில் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.

Update: 2024-05-15 13:27 GMT

புனே,

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் பிரகாஷ் கோவிந்த் கபாடே (வயது 39). மராட்டியத்தின் ஜல்காவன் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான ஜாம்நர் பகுதிக்கு கடந்த வாரம் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர், பணிக்கு பயன்படும் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து எழுந்தனர்.

அப்போது, தரையில் காயங்களுடன் கிடந்த பிரகாசை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை, சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும், ஜாம்நர் போலீஸ் குழுவினர் அந்த வீட்டுக்கு சென்றனர். எனினும் தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை.

15 ஆண்டுகளுக்கு முன் மாநில ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்த பிரகாஷ், மராட்டிய போலீசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். பாந்திரா நகரில் உள்ள சச்சின் தெண்டுல்கரின் வீட்டில் கடந்த ஆண்டு அவர் பணியமர்த்தப்பட்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்