இறுதிவரை சென்று தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது - பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரண்
ஐ.பி.எல்.தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் பஞ்சாப் தோல்வியடைந்தது.
சண்டிகர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் தவான் காயத்தால் பங்கேற்க முடியாத நிலையில் சாம் கர்ரண் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் இறுதி வரை வெற்றிக்காக போராடிய பஞ்சாப் அணியின் செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் கூறுகையில் : "இந்த மைதானம் சற்று மெதுவாக இருந்தது. பேட்டிங்கில் நாங்கள் சிறப்பான துவக்கத்தை பெற தவறி விட்டோம். அதோடு முடிவிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பாக விளையாடி இருந்தனர். இருப்பினும் 150 ரன்கள் வரை நெருக்கமாக சென்றது உண்மையிலேயே அற்புதமான ஒன்றுதான். அதேபோன்று பந்துவீச்சிலும் நாங்கள் சரியாக செயல்பட்டோம். சரியான நேரத்தில் விக்கெட்டுகளும் கிடைத்தன.
ஆனாலும் எதிர்பாரா விதமாக இறுதிவரை சென்று நாங்கள் இப்படி தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது. எங்களுடைய திட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்தும் சிறப்பாக இருந்தும் இறுதியில் ஒரு நெருக்கமான தோல்வி வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் நாங்கள் இந்த தோல்வியில் இருந்து வலுவாக மீண்டு வர முடியும். அடுத்தடுத்து இப்படி நெருக்கமான தோல்விகளை சந்தித்து வந்தாலும் எங்களது அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்" என்று கூறினார்.