எஸ்.ஏ 20 லீக் கிரிக்கெட்: இறுதி போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்
எஸ்.ஏ 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் அரைஇறுதியில் சன்ரைசர்ஸ் அணி, சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.;
செஞ்சூரியன்,
எஸ்.ஏ 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் சந்தித்தன.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்க்ராம் சதம் (100 ரன், 58 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தார். அடுத்து களம் இறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்களே எடுக்க முடிந்தது. ரீஜா ஹென்ரிக்ஸ் 96 ரன்கள் (11 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (இரவு 8 மணி) நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.