கேப்டன்ஷிப் திறமைக்காக டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவது அவசியம் - முகமது கைப்

50 ஓவர் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்தி தன்னுடைய பணியில் சிறப்பாக செயல்பட்டார்.

Update: 2023-12-06 12:25 GMT

புதுடெல்லி,

இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடியது. இந்த தொடரில் இடம்பெறாத ரோகித் சர்மா அடுத்ததாக நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் ஓய்வெடுக்க உள்ளதால் 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அதிரடியான துவக்கத்தை கொடுத்த பேட்ஸ்மேன் என்பதை தாண்டி கேப்டன்ஷிப் திறமைக்காக 2024 டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவது அவசியம் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக இருப்பதை விட கேப்டனாக 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தேவை. நல்ல தலைமை பண்புகளை கொண்டுள்ள அவர் கண்டிப்பாக அத்தொடரில் இருக்க வேண்டும். குறிப்பாக 50 ஓவர் உலகக்கோப்பையில் அவர் கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்தி தன்னுடைய பணியில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவருடைய அனுபவம் டி20 போட்டிகளுக்கும் தேவை. ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறந்த வேலையை செய்துள்ளார். எனவே டி20 போட்டிகளிலும் அவர் கண்டிப்பாக இந்திய அணிக்கு தேவை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்