சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனை படைத்த ரோகித் சர்மா..!
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மா 121 ரன்கள் குவித்து அசத்தினார்.
பெங்களூரு,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
இதில் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
இதில் முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிவடைந்ததால், தொடர்ந்து 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. 2-வது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
மேலும் இந்த போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளார். அவைகள்;-
1. ரோகித் இந்த போட்டியில் அடித்த 121 ரன்களையும் சேர்த்து இந்திய அணியின் கேப்டனாக அவர் இதுவரை 1647 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 1647
2. விராட் கோலி : 1570
3. எம்எஸ் தோனி : 1112
2. அது மட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் உடைத்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 36 வருடம் 272 நாட்கள்
2. விராட் கோலி : 33 வருடம் 307 நாட்கள்
3. சூரியகுமார் யாதவ் : 33 வருடம் 91 நாட்கள்.
3. ரோகித் சர்மா இதுவரை டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்துள்ளார். இந்த 5 சதங்களில் 3 சதங்களை அவர் கேப்டனாக பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த கேப்டன் என்ற பாகிஸ்தானின் பாபர் அசாம் உலக சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
4. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற உலக சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. பாபர் அசாம்/அஸ்கர் ஆப்கன்/இயன் மோர்கன்/பிரையன் மசாபா/ரோகித் சர்மா: தலா 42
2. எம்எஸ் தோனி; 41
3. ஆரோன் பின்ச் : 40