ரிஷப் பண்ட்-க்கு மும்பையில் அறுவை சிகிச்சை: பிசிசிஐ அறிவிப்பு

மேல்சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

Update: 2023-01-04 11:07 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த 30-ம் தேதி விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு அதிகாலை சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார். அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவருக்கு, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல்நிலை தற்போது சீரடைந்து வருகிறது.

இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

ரிஷப் பண்ட்டை மும்பைக்கு மாற்றுவது குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது. டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரிஷப் பண்ட் , ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) மூலமாக மும்பைக்குக் அழைத்து வரப்படுகிறார். மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பண்ட் அனுமதிக்கப்படுவார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். பிசிசிஐ மருத்துவக் குழுவால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். காயத்திலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கான எல்லா உதவிகளையும் ரிஷப் பந்த்துக்கு பிசிசிஐ வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்