உலகக் கோப்பை கிரிக்கெட்டை தவற விடும் ரிஷப் பண்ட்?
இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் என கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மும்பை,,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது.
அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார். தொடக்கத்தில் டேராடூனில் சிகிச்சை பெற்ற அவர் அதன் பிறகு மும்பைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கால் முட்டியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் தசைநாரில் கிழிந்த இரு பகுதியை சரி செய்ய ஆபரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த 6 வாரத்தில் இன்னொரு தசைநார் கிழிவுக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.
தற்போதைய நிலைமையில் ரிஷப் பண்ட் இந்த ஆண்டில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. குறைந்தது 6 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டி இருக்கும். இதனால் ஐ.பி.எல். தொடரை முழுமையாக தவற விடுகிறார்.
இதே போல் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.