டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
புதுடெல்லி,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தனது நிலையை இன்னும் திடப்படுத்திக் கொள்ளலாம். இந்த சீசனில் ஏற்கனவே சந்தித்த லீக்கில் டெல்லியை வீழ்த்தியிருப்பதால் பெங்களூரு வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். விராட் கோலி, பிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரின் ரன்வேட்டை தொடர்ந்தால் பெங்களூருவை அடக்குவது கடினம்.
அதே சமயம் முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக உதைவாங்கிய டெல்லி அணி, கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று சரிவில் இருந்து மீண்டுள்ளது. கடந்த ஆட்டத்தில் 131 ரன்களை இலக்காக நிர்ணயித்து குஜராத்தை 5 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆச்சரியமான ஒரு வெற்றியை ருசித்தது. கடைசி சில ஆட்டங்களில் சொதப்பிய கேப்டன் வார்னர் ரன்குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அத்துடன் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டும் 'பிளே-ஆப்' வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால், இது அவர்களுக்கு வாழ்வா-சாவா மோதலாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.