ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா...!

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Update: 2023-09-16 06:06 GMT

Image Courtesy: AFP

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் (50 ஓவர்) விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் அணி 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 259 ரன்களே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் பந்து வீசி 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜடேஜா 7வது வீரராக இணைந்துள்ளார்.

முதல் ஆறு இடங்களில் அனில் கும்ப்ளே 334 விக்கெட், ஜவஹல் ஸ்ரீநாத் 315 விக்கெட், அஜித் அகர்கர் 288 விக்கெட், ஜாகீர் கான் 269 விக்கெட், ஹர்பஜன் சிங் 265 விக்கெட், கபில் தேவ் 253 விக்கெட் எடுத்து உள்ளனர். இந்த வரிசையில் ஜடேஜா 7வது வீரராக (200 விக்கெட்) இணைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்