டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சு - புதிய சாதனை படைத்த ரஷித் கான்
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சை ரஷித் கான் இன்று பதிவு செய்துள்ளார்.
கயானா ,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஆடின.
இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீசில் உள்ள கயானாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தான் தரப்ப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலென் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் பின் ஆலென் 0 ரன், டெவான் கான்வே 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் வில்லியம்சன் 9 ரன், டேரில் மிட்செல் 5 ரன், க்ளென் பிலிப்ஸ் 18 ரன், சாம்ப்பென் 4 ரன், பிரேஸ்வெல் 0 ரன், சாண்ட்னெர் 4 ரன், மேட் ஹென்றி 12 ரன், பெர்குசன் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பசல்ஹக் பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ரஷித் கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சை ரஷித் கான் இன்று பதிவு செய்துள்ளார். அவர் இன்று 4 ஓவரில் 17 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சு;
ரஷித் கான் - 4/17 - நியூசிலாந்துக்கு எதிராக 2024
டேனியல் வெட்டோரி - 4/20 - இந்தியாவுக்கு எதிராக 2007
ஜீஷான் மக்சூத் - 4/20 - பப்புவா நியூ கினியாவிற்கு எதிராக 2021