ரஞ்சி டிராபி 2024-25: டெல்லி அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்..? - வெளியான தகவல்
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் அக்டோபர் 11-ம் தேதி தொடங்க உள்ளது.
புதுடெல்லி,
இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடர் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் அரையிறுதி பிப்ரவரி 17-ல் தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்று விளையாடக்கூடிய வாய்ப்பு உள்ள வீரர்கள் பட்டியலை டெல்லி மாநில கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் இந்திய தேசிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் பெயர் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
விராட் கோலி கடைசியாக ரஞ்சி டிராபி தொடரில் 2019-ம் ஆண்டு விளையாடி இருந்தார். இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் நடப்பு ரஞ்சி சீசனுக்கு டெல்லி அணியில் விளையாட வாய்ப்புள்ள 84 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில்தான் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் பெயர் இடம் பெற்று இருக்கிறது.
அதே சமயத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் விளையாடுவார்கள் என்பதால், அவர்கள் கண்டிப்பாக ரஞ்சி டிராபியில் விளையாட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் வெளியிட்ட இந்தப்பட்டியலில் இஷாந்த் சர்மா பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.