ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி ஆறுதல் வெற்றி...!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி வெற்றி பெற்றது.
சென்னை,
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தமிழகம் 324 ரன்களும், சவுராஷ்டிரா 192 ரன்களும் எடுத்தன. 132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழகம் 133 ரன்னில் சுருண்டது.
இதன் மூலம் சவுராஷ்டிராவுக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன் எடுத்திருந்தது.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணியில் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ஹர்விக் தேசாய் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. ஹர்விக் தேசாய் சதம் அடித்தும் (101 ரன், 205 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) பலன் இல்லை.
காயத்தில் இருந்து மீண்டு களம் திரும்பிய சவுராஷ்டிரா கேப்டன் ரவீந்திர ஜடேஜா (25 ரன், 36 பந்து, 2 பவுண்டரி) அதிகநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. முடிவில் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் 68.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜித் ராம் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
நடப்பு சீசனில் கால்இறுதி வாய்ப்பை இழந்து விட்ட தமிழக அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. தனது பிரிவில் தமிழக அணி 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என்று 21 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பெற்றது. தோல்வி அடைந்தாலும் சவுராஷ்டிரா 26 புள்ளிகளுடன் (3 வெற்றி, 2 தோல்வி, 2 டிரா) முதலிடத்தை பிடித்து கால்இறுதியை ஏற்கனவே உறுதி செய்து விட்டது.