ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின;
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல்., தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களும், சஞ்சு சாம்சன் 68 ரன்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மொகித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதனையடுத்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக கில் , சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த மேத்யூ வேட் 4 ரன் , அபினவ் மனோகர் 1 ரன் , விஜய் ஷங்கர் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் கில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.பின்னர் ராகுல் திவேட்டியா , ரஷீத் கான் இணைந்து அதிரடியாக விளையாடினர்.
இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.அந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் அவேஷ் கான் வீசினார். இதில் அதிரடியை காட்டிய ரஷீத் கான் 3 பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அவர் 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார் குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது
இந்த நிலையில், ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.