ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு ராகுல், ஸ்ரேயாஸ் திரும்புகிறார்கள்: பயிற்சியாளர் டிராவிட் சூசக தகவல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் திரும்ப இருப்பதை டிராவிட் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-14 22:20 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

ஆசிய கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக நடக்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தியாவுக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடக்கிறது. செப்.2-ந்தேதி இந்திய அணி, பாகிஸ்தானுடன் கோதாவில் இறங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் அணியில் யார்-யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பேட்ஸ்மேன்கள் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் காயம் காரணமாக சில மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் அவர்கள் ஏறக்குறைய உடல்தகுதியை எட்டிவிட்டனர்.

இந்திய அணியின் மிடில் வரிசை பலவீனமாக இருப்பதால் அவர்கள் இருவரையும் அணிக்கு கொண்டு வர அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை தலைமை பயிற்சியாளர் டிராகுல் டிராவிட் மறைமுகமாக தெரிவித்தார்.

டிராவிட் பேட்டி

டிராவிட் அளித்த பேட்டியில் 'காயத்தில் இருந்து மீண்டுள்ள சில வீரர்கள் (ராகுல், ஸ்ரேயாஸ்) இந்திய அணிக்கு வருகை தர உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு (ஆசிய கிரிக்கெட்) அளிப்போம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்போது நான் ஆசிய கோப்பை கிரிக்கெட் குறித்து சிந்திக்கவில்லை.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் சில நாட்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவோம். வருகிற 23-ந்தேதியில் இருந்து பெங்களூருவில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்திய ஒரு நாள் போட்டி அணி அங்கு கூடி ஆசிய கோப்பை போட்டிக்காக ஒரு வாரம் பயிற்சியில் ஈடுபட உள்ளது' என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்