பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான முதலாவது டி20: மழை காரணமாக ஆட்டம் ரத்து
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது.;
ராவல்பிண்டி,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் ராபின்சன் மற்றும் டிம் சீபர்ட் களமிறங்கினர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி முதல் ஓவரை வீச தயாரானார்.
ஆனால் முதல் பந்தை வீசுவதற்கு சில மணித்துளிகள் முன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆட்டம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மழையால் 2 மணி நேரங்கள் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து 2 பந்துகளில் 1 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் அடித்திருந்தது.