வங்காளதேசத்தை வீழ்த்துமா பாகிஸ்தான் அணி..? கொல்கத்தாவில் இன்று மோதல்

வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் பாகிஸ்தான் இன்று வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

Update: 2023-10-30 23:51 GMT

கொல்கத்தா,

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையலான பாகிஸ்தான் அணியுடன், ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணி மோதுகிறது.

பாகிஸ்தான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை தோற்கடித்து நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் அதன் பிறகு அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வரிசையாக தோல்வியடைந்தது.

உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரைஇறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும். எனவே இது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாகும்.

பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த வங்காளதேச அணி அதன் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய பலமான அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்தது. அடுத்த சுற்று வாய்ப்பை எற்கனவே பறிகொடுத்து விட்டதால் இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் வங்காளதேசம் வரும் ஆட்டங்களில் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 33 ஆட்டங்களில் பாகிஸ்தானும், 5 ஆட்டங்களில் வங்காளதேசமும் வென்று இருக்கின்றன. உலகக் கோப்பையில் இரண்டு முறை மோதியதில் தலா ஒரு வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, சாத் ஷகீல், ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவுப்.

வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மஹிதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம்.

Tags:    

மேலும் செய்திகள்